×

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை- பாஜக நிர்வாகி பரபரப்பு பேட்டி

 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ் இன்று புதுப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பு விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீசார், 7 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர். 

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த பால் கனகராஜ், “ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எல்லா கோணங்களிலும் என்னிடம் விசாரணை நடத்தினர். குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்குமா? என போலீசார் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு தந்தேன். எனக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த வித விரோதமும் இருந்ததில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் 2015-ல் ஒரு சிறிய கருத்துவேறுபாடு இருந்தது, ஆனால் அது ஒரே வாரத்தில் சரியாகி விட்டது.. அதற்கு பிறகு ஒரு நெருங்கிய நண்பர்களாகவே பழகி வந்தோம்” என்றார்.

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், சிவசக்தி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், அதிமுக பிரமுகர் மலர்க்கொடி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 24 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.