×

“பொதுக்கூட்டத்துக்கு வந்தா நாற்காலி இலவசம்”- கூட்டத்திற்கு ஆள் சேர்த்த அதிமுக! தலையில் நாற்காலிகளை தூக்கி சென்ற மக்கள்

 

பெருமாநல்லூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக நாற்காலிகள் வழங்கப்பட்ட நிலையில், கூட்டம் முடிந்ததும் பொதுமக்கள்  நாற்காலிகளை தூக்கிக்கொண்டு சென்றனர்.

 
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா, பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, 2026 இல் நிச்சயமாக அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும், திமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தராமல் இருக்கிறது.  எனவே பொதுமக்கள் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றும் பேசினார். மேலும், முதலமைச்சரின் மகன் என்ற ஒரே ஒரு தகுதியை வைத்துக்கொண்டு துணை முதல்வர் பதவியை வாங்கிக்கொண்டு என்ன செய்தார் என்றும், உதயநிதி வருவதற்கு முன் வந்தபின் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது எதுவுமே கிடையாது என்றும் பேசினார்.

முன்னதாக, பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காக, பொதுக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு புதிதாக பிளாஸ்டிக் நாற்காலி தரப்படும் என அறிவிக்கப்பட்டு, இரண்டாயிரம் புதிய நாற்காலிகளை வாங்கி கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களை அதில் அமரவும் வைத்திருந்தனர். நலத்திட்ட உதவியாக நாற்காலிகள் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் இரண்டாயிரம் நாற்காலிகளும் நிறையும் அளவுக்கு பொதுமக்கள் வந்திருந்தனர். பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்ததும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் அமர்ந்திருந்த நாற்காலிகளை எடுத்துக் கொண்டு, கூட்டம் கூட்டமாக தலையில் வைத்து கொண்டு சென்றனர்.


 
இதைப் பார்த்த ரோட்டில் சென்ற பொதுமக்கள் எல்லாரும் ஏன் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே சென்றார்கள். ஆனால்  கூட்டம் சேர்ப்பதற்காக புது யுத்தியாக புதிதாக நாற்காலிகளை அதிமுக நிர்வாகிகள் வழங்கியது தெரிந்து பலரும் நாமும் அதிமுக கூட்டத்திற்கு சென்றிருக்கலாமே என்று பேசிக்கொண்டு சென்றதை காண முடிந்தது.