×

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் புற காவல் நிலையங்கள் தொடக்கம்

 

சென்னையில் உள்ள எட்டு அரசு மருத்துவமனைகளில் புற காவல் நிலையங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார். பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 26 வயதான இளைஞர் தன் தாய் பிரேமாவுக்கு சரியான முறையில் மருத்துவர் பாலாஜி சிகிச்சை அளிக்கவில்லை என கூறி கத்தியால் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து விக்னேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.போதிய பாதுகாப்பு வசதிகளும், சென்னையில் பல மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு இல்லை எனவும் சமூக வலைத்தளங்களில் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் புற காவல் நிலையங்கள் இல்லாமல் இருந்த எட்டு அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்களை தொடங்கியுள்ளது சென்னை காவல்துறை. இதுகுறித்த அறிவிப்பை இன்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் C4 காவல் நிலையம் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 98 போலீசாருடன் செயல்பட்டு வருகிறது. ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் H2 காவல் நிலையம் இரண்டு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 98 போலீசாருடன் செயல்பட்டு வருகிறது.  தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 95 காவலர்களுடன் H7 காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் நலம் மற்றும் பொதுநல மருத்துவமனையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 95 போலீசாருடன் D8 காவல் நிலையம் செயல்பட்டு வருவருகிறது. எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 95 போலீசாருடன் F7 காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 91 போலீசாருடன் E6 காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்(KMC) ஒரு காவல் ஆய்வாளருடன் 90 காவலர்கள் என G6 காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அயனாவரம் அரசு மனநல காப்பகம் மருத்துவமனையில் ஒரு காவல் ஆய்வாளர் உடன் 95 போலீசார் என G4 காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. மொத்தம் மேற்கண்ட எட்டு அரசு மருத்துவமனைகளிலும் எட்டு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.


இது தவிர ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு விழா பல்நோக்கு மருத்துவமனை, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள்(OP Police Booth) அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் ஒரு உதவி ஆய்வாளர் இரண்டு காவலர்கள் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சென்னையில் மீதமுள்ள 8 மருத்துவமனைகளான எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்தி நகர் அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, கே.கே நகர் அரசு மருத்துவமனை, கே.கே நகர் ESI மருத்துவமனை, அமைந்தகரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை ஆகிய எட்டு மருத்துவமனைகளில் புற காவல் நிலையங்கள் இல்லாமல் இருந்த நிலையில் இன்று முதல் மேற்கண்ட எட்டு காவல் நிலையங்களிலும் புறக் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டு சுழற்சி முறையில் இரண்டு காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.