×

பிரதமர் மோடி 20-ம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை

 

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி வரும் 20-ஆம் தேதி திருச்சி வருகை தர இருக்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக 19ஆம் தேதி கேலோ இந்தியா போட்டியை தொடக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். அந்த போட்டியை தொடக்கி வைத்த பின்னர் 20ஆம் தேதி காலை விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை தந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய உள்ளார். ராமரின் குலதெய்வமாக பெருமாள்  கருதப்படுகிறார்.  அதன் காரணமாக ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட வேண்டும் என்பதற்காக 108 வைணவ தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி  வருகிறார்.

மோடி வருகையை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், காவல்துறை சார்பிலும் செய்யப்பட உள்ளது. மோடி குறித்து இன்று அவர்கள் ஆலோசனை  மேற்கொள்ள உள்ளனர். அதன் பின்பு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது, விமான நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோவில் செல்லும் வழிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கோவிலிலும், கோவிலை சுற்றிய பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது  உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள நான்கு உத்தர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கணக்கெடுப்பு பணியும் போலீசார் நடத்த உள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் விமான நிலைய புதிய முனைய திறப்பு விழா பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டம் மதிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மீண்டும் திருச்சி வருவது குறிப்பிடத்தக்கது.