×

“ஓட்டுக்கு பணம் கொடுக்க மட்டும் கணக்கெடுக்கிறீர்கள்.. இதை செய்ய மாட்டீர்களா?”- அன்புமணி

 

 

தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் உடனடியாக தரவுகளை சேகரித்து, அந்த இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பாரதிதாசனை சந்தித்து வலியுறுத்தினார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை எனக் கூறும் ஸ்டாலினுக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை. கருணாநிதி இருந்திருந்தால் கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வந்திருப்பார். பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் தனியாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் எங்களுக்கு 25 எம்.பிக்களை கொடுத்திருக்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பெயர்களையும் தனித்தனியாக சொல்ல முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொதுவான பட்ஜெட் இது.


தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தமிழக அரசுக்கு பல பரிந்துரைகளை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 69% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தால் அன்றே திமுக ஆட்சி போயிடும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த தெருவில் எந்த சாதி உள்ளது, எந்த மதத்தினர், எந்த கட்சியினர் உள்ளனர், அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என கணக்கெடுப்பு எடுத்து பகுதி வாரியாக பணம் கொடுத்து திமுகவினர் வாக்குகளை பெற்றனர். தேர்தலுக்கு மட்டும் கணக்கெடுப்பு வேண்டும், சமூகநீதிக்கு கணக்கெடுப்பு வேண்டாமா?” எனக் கூறினார்.