×

வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குவதில் சமூக அநீதி! அன்புமணி ராமதாஸ் கண்டனம்

 

வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குவதில் சமூக அநீதியைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் வருவாய்த்துறையில் வருவாய் உதவியாளர் நிலையிலிருந்து துணை வட்டாட்சியராகவும், துணை வட்டாட்சியர் நிலையிலிருந்து வட்டாட்சியராகவும் பதவி உயர்வு வழங்குவதில் மிகப்பெரிய அளவில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை  தமிழக அரசு அவமதித்திருப்பது மட்டுமின்றி, பதவி உயர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு மறுத்து வருவதும் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்படும் வருவாய் உதவியாளர்கள்  துணை வட்டாட்சியராகவும், வட்டாட்சியராகவும் பதவி உயர்வு பெற வகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் மிகவும் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. வருவாய் உதவியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்க்கப்படும் ஒருவர், குறைந்தது இரு ஆண்டுகள் வருவாய் ஆய்வாளராக பயிற்சி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், துணை வட்டாட்சியராக பணியாற்றுபவர்கள் வட்டாட்சியராக பதவி உயர்வு பெறுவதற்கு இரு மாதங்களுக்கு காவல்துறை பயிற்சி பெற்றிருப்பது மட்டுமின்றி, இரு ஆண்டுகள் தகுதிகாண் பருவத்தை (புரோபேஷன்)  நிறைவு செய்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் பதவி உயர்வில் இந்த விதிகள் காலில் போட்டு மிதிக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வருவாய் ஆய்வாளராக இரு ஆண்டுகள் பயிற்சி பெறாத 9 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில் இரு ஆண்டுகள் வருவாய் ஆய்வாளர் பயிற்சி பெற்ற 9 பேருக்கு இந்த பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரு மாத காவல்துறை பயிற்சியையும், இரு ஆண்டுகள் தகுதிகாண் பருவத்தையும் நிறைவு செய்யாத 8 பேருக்கு வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பணிக்கான பதவி உயர்வுகள் 2018&ஆம் ஆண்டை மைய நாளாக வைத்து, 2022&ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. இதில் உள்ள விதிமீறல்கள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய வருவாய் நிர்வாக ஆணையர், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்து விட்டு, புதிய பட்டியல் தயாரிக்கும்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆணையிட்டார்.

அதன்படி புதிய பட்டியலை மாவட்ட ஆட்சியர் தயாரித்தாலும் கூட, அதிலும் ஏராளமான விதிமீறல்கள் செய்யப்பட்டு, தகுதியில்லாதவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலை எதிர்த்து எவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக, 12.01.2024&ஆம் நாள் வெளியிடப்பட்ட பதவி உயர்வு பட்டியல், கடந்த ஆண்டு அக்டோபர் 16&ஆம் தேதியே வெளியிடப்பட்டது போன்று முன்தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பட்டியல் வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளே 13.01.2024ஆம் நாள் பதவி உயர்வு  ஆணையும் வழங்கப்பட்டு விட்டது. இது பதவி உயர்வு தொடர்பான வழக்குகளில் 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளை அவமதிக்கும் செயலாகும்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 27.03.2024&ஆம் நாள் அளித்தத் தீர்ப்பில், மாவட்ட ஆட்சியர் வழங்கிய பதவி உயர்வை ரத்து செய்தது மட்டுமின்றி, தகுதி அடிப்படையில் புதிய பதவி உயர்வு பட்டியலை வழங்கும்படி ஆணையிட்டது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கிறது. மாறாக, இப்போது வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் தான் சரியானவை என்பது போன்று விதிகளை மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய சமூகநீதிப் படுகொலையை மன்னிக்க முடியாது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய சமூகநீதி படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையரும் இதில் தலையிட்டு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும். கிருஷ்ணகிரி  மாவட்டம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வுகள் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளின்படி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.