×

மோடி 3.0- சீர்திருத்தங்களும், சாதனைகளும் தொடர வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்

 

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திரமோடி அவர்கள் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது அமைச்சரவையில்  இடம் பெற்றுள்ளவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு நாடு முன்னேறுவதற்கு சீர்திருத்தம் தான் சிறந்த வழி என்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், அதை பிரிந்து கொண்டு பல்வேறு முதன்மையான சீர்திருத்தங்களை மோடி அவர்கள் தலைமையிலான அரசு செய்திருக்கிறது. மோடி அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களின் பயன்களை இந்தியா இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அந்த சீர்திருத்தங்கள்  காரணமாக உலக அரங்கில் வலிமையும், செல்வாக்கும் கொண்ட நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது.

உலக அரங்கில் இந்தியா எட்ட வேண்டிய உயரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றுக்காக புதிய ஆட்சிக்காலத்தை மோடி அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பார்க்கப்படுவது நதிகள் இணைப்பு ஆகும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பாக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை உணர்ந்து காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நதிகள் இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நரேந்திர மோடி 3.0 அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்தியாவின் கடைமடை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்திற்கு தடை விதித்தல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் திட்டத்திற்கு கேரள அரசு போடும் முட்டுக்கட்டைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் புதிய அரசு மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.