×

3 நகரங்களில் நடைபெற இருந்த பாமக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு - ராமதாஸ் அறிவிப்பு.. 

 


திமுக அரசைக் கண்டித்து 3 மாவட்ட நகரங்களில் நடைபெற இருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக பாமக தலைமை  அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “பருவமழை காரணமாக, திமுக அரசை கண்டித்து 3 நகரங்களில் நடத்தப்படவிருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு: திசம்பர் பிற்பகுதியில் நடத்தப்படும்!

மக்கள் விரோத   திமுக அரசைக் கண்டித்து வரும் 17-ஆம் தேதி வடலூர்,  20-ஆம் தேதி திண்டிவனம்,  26-ஆம் தேதி சேலத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்; அவற்றில்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. தலைவர்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில்  அடுத்துவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. திசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை,   சாதிவாரி கணக்கெடுப்பும், சமூகநீதியும் இல்லை,   வாட்டி வதைக்கும் வரி, கட்டண உயர்வால் மக்கள் அவதி உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து சிதம்பரம்/விருதாச்சலம், திண்டிவனம், சேலம் ஆகிய 3 நகரங்களில் பாமக பொதுக்கூட்டங்கள் நடத்தும் என கடந்த 12ம் தேதி பாமக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.