×

”யார் பணம் கொடுத்தாலும் வாங்குக்கிட்டு மாம்பழத்துக்கு ஓட்டு போட்ருங்க”- ராமதாஸ்

 

இடஒதுக்கீடு போராட்டத்திற்காக 10 முறை சிறை சென்றுள்ளேன் என விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி அருகேயுள்ள சிந்தாமணி பகுதியில் பாமக வேட்பாளர் சி. அன்புமனியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கெளரவ தலைவர் ஜி.கே.மணி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “ராஜாஜி, பேரறிஞர் அண்ணா ஆட்சி செய்தபோது ஒரு சொட்டு மது தமிழகத்தில் கிடையாது. ஆலைகள் செய்வோம், கல்வி சாலைகள் செய்வோம் என்பதை திமுகவினர் தவறாக புரிந்து கொண்டு சாராய ஆலைகள் திறந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 65 பேர் இறந்துவிட்டனர்.

மது உயிருக்கு கேடு வீட்டிற்கு கேடு என்று பாட்டில்களில் ஒட்டிவிட்டு நல்லா குடிங்கோ என்கிறார்கள். கடந்த 45 ஆண்டு காலமாக இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்து கொண்டிருக்கிறேன். இட ஒதுக்கீட்டுக்காக 10 முறை சிறைச்சாலைகளுக்கு சென்று வந்துள்ளேன். ஆனால் பாளையங்கோட்டை சிறைச்சாலை இதுவரை செல்லவில்லை. தேர்தலில் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் தவறாமல் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பெண் பிள்ளைகளை பெண்கள் என்று கூறாமல் பெண் தெய்வம் என கூறுங்கள். பெண்களுக்கு நாங்கள் முதல் மரியாதையை கொடுத்து வருகிறோம்” என்றார்.