×

மு.க.ஸ்டாலினிடம் இடஒதுக்கீடு கேட்பது அவமானமாக உள்ளது- ராமதாஸ்

 

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்பது தனக்கு அவமானமாக இருப்பதாகவும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அண்டம் கிடுக்கிடுக்க போராட்டம் நடத்த உள்ளதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தனது 86வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தனது பிறந்தநாளையொட்டி திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் உள்ள வன்னியர் சங்கத்தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் சிலை அருகே 86 மரக்கன்றுகளை அவர் நட்டுவைத்தார். அதனை தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியினை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது துணைவியார் சரஸ்வதி, பாமக கெளரவ தலைவர் ஜி கே மணியுடன் கண்டு ரசித்தார்.

பிறகு நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “கேரள மாநிலத்தில் ஈழவர்கள் என்ற சாதியினரை  உயர்ந்த சாதியினர் 20 அடி தூரத்தில் கண்டால் குளித்து விட்டு வரக்கூடிய சூழல் இருந்தது, அதெல்லாம் மாறி தற்போது அவர்கள் முதலமைச்சராக வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பீர், பிராந்தி போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க தான் போராடி வருகிறோம், 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சரிடம் கேட்பது தனக்கு அவமானமாக இருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டால் மத்திய அரசிடம் கேட்க கூறுகிறார். அப்புறம் எதற்கு இவர் முதலமைச்சராக உள்ளார்? இடஒதுக்கீடு தொடர்பாக அண்டம் கிடுகிடுவென நடுங்க போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.