தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்க தமிழக அரசால் முடியுமா?- ராமதாஸ்
தமிழால் முடியும்.... தமிழைக் கட்டாயப் பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்க தமிழக அரசால் முடியுமா? என பா.ம.க. நிறுவனர் ராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் “தமிழால் முடியும்” என்ற வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற உள்ளது. அன்னைத் தமிழ் வளர்ச்சிக்காக நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் வரவேற்கத்தக்கவை தான். ஆனால், அன்னைத் தமிழுக்கு கால் நூற்றாண்டுக்கும் மேலாக செய்து வரும் துரோகத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் எனும் முகமூடியை போட்டு மறைக்கும் தமிழக அரசின் முயற்சி வெற்றி பெறாது. அன்னைத் தமிழுக்கு தமிழக அரசு இழைத்து வரும் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அப்போதைய கலைஞர் அரசு, எட்டாம் வகுப்புக்கு மாற்றாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக அறிவித்து 19.11.1999ஆம் நாளில் அரசாணை பிறப்பித்தது. ஆனால், அந்த அரசாணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கலைஞர் அரசு செய்த மேல்முறையீடு 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனது தொடர் வலியுறுத்தலின் காரணமாக அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் சட்டத்தை 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து கலைஞர் அரசு நிறைவேற்றியது. அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், 2015-16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டமும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வந்து தமிழைக் கட்டாயப் பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் கொண்டு வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ, தமிழை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறது. அன்னைத் தமிழுக்கு எதிரான தமிழக அரசின் துரோகங்கள் இப்படியாகத் தான் தொடர்கின்றன.
எனவே, அன்னைத் தமிழுக்கு தொண்டு செய்வதாக நாடகமாடுவதை விடுத்து, பட்டப்படிப்பு வரை தமிழ்க் கட்டாயப் பயிற்று மொழி, 12-ஆம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாட மொழி, கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அது தமிழக அரசால் முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.