பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்.. கன்னியாகுமரியில் பரபரப்பு..
கன்னியாகுமரியை அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி தூத்துக்குடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளன. இவர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த சூழலில், தூத்துக்குடி செல்வம் சேலம் நான்கு வழி சாலை அருகே பதுங்கியுள்ளதாக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சுசீந்திரன் இன்ஸ்பெக்டர் உள்பட காவலர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
தொடர்ந்து ரவுடி செல்வத்தை பிடிக்கும் முயன்ற போது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கையில் வெட்டுக்காயம் பட்டு காவலர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து தப்பி ஓட முயன்ற செல்வத்தை, சுசீந்திரம் காவல் ஆய்வாளர் தனது கை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். இதில் ரவுடி செல்வம் காலில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார்.
பின்னர் தப்பியோட முயன்ற ரவுடி செல்வம் மற்றும் படுகாயம் அடைந்த காவலரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரபல ரவுடி காவல் துறையினரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், கன்னியாகுமரி பகுதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.