×

திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது- காவல்துறை

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் சாட்டை துரைமுருகனால் மிரட்டல்   தன் உயிருக்கு ஆபத்து தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி திருச்சி சூர்யா மனு தாக்கல் செய்த நிலையில், திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு  வழங்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

திருச்சி சூர்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன் எனது அப்பா திருச்சி சிவா பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் நான் பாரதிய ஜனதா கட்சியில் OBC அணியில் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்தேன் மேலும் சமூக ஊடகங்களில், தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் கலந்து கொண்டு வருகிறேன்.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன் இதனால் சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார் மேலும் இதே கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் இவர்கள் என் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் நான் குடியிருக்கும் வீட்டை கடந்த 2022 ஆம் ஆண்டு சிலர் தாக்குதல் நடத்தினர். அது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி கடந்த மாதம் காவல்துறைக்கு மனு மூலம் விண்ணப்பித்திருந்தேன் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் அதற்கு அரசு விதிக்கும் உரிய கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளேன் எனவே எங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட  வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு என்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி தற்போதை சூழலில் சூர்யாவுக்கு போலீசார் பாதுகாப்பு தேவையில்லை அனைவருக்கும் போலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதே போல் சாட்டை துரைமுருகன் தரப்பில் சூர்யா மனுவிற்க்கு  எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரையும் நாம் தமிழர் கட்சியினர்  பற்றி அவதூறான செய்திகளை திருச்சி சூர்யா  பரப்பி வருகிறார், இது குறித்து சட்டரீதியாக நாங்கள் சந்திக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்நிலையில் எங்களை குற்றம் சாட்டி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. சாட்டை துரைமுருகன் தரப்பு இடையீட்டு  மனுவை  ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக காவல்துறை தலைவர் மற்றும்  திருச்சி காவல்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.