×

யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு

 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாடகை விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

பிரபல பின்னணி பாடகர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது அவரது வீட்டின் உரிமையாளர் ஹஜ்மத் பேகம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அதில், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், வாடகை பணம் ரூ.5 லட்சம் செலுத்தாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்யவுள்ளதாக  குறிப்பிட்டிருந்தார். மேலும் வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் ஸ்டூடியோவையும் காலி செய்வதாக உரிமையாளர் ஹஜ்மத் பேகம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் 2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு 3 ஆண்டுகளாக வாடகை தரவில்லை என உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த யுவன் சங்கர் ராஜா, அவதூறு பரப்பிய உரிமையாளருக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடத்திய போலீசார் விசாரணையில் வாடகை பாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வாடகை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் போலீசார் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் மொத்தமாக வாடகையை யுவன் செலுத்தி வந்த நிலையில், இம்முறை GOAT பட  ஆடியோ வெளியான பிறகு வாடகை தருவதாகவும், இதனிடையே வீட்டை காலி செய்ய யுவன் முயன்றதாகவும் வீட்டு உரிமையாளர் புகார் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்த நிலையில், அவர் தரப்பு விளக்கத்தை கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.