×

காவல்துறையின் பிடி மேலும் இறுகி வருகிறது : ஜாஃபர் சாதிக் கூட்டாளிகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!

 

ஜாஃபர் சாதிக் மீதான காவல்துறையின் பிடி மேலும் இறுகி வருகிறது.அவர் கூறியதன் பேரிலேயே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக ஜாஃபர் சாதிக் கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாஃபர் சாதிக்கும் அவரது நான்கு கூட்டாளிகளும் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐந்து பேரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போதைப்பொருள் கடத்தலுக்காக சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து செயல்பட்டதாகவும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குடியிருந்தால் யாருக்கும் சந்தேகம் எழாது என்று கருதியதாகவும் ஜாஃபர் சாதிக் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

ஜாஃபர் சாதிக் அதிகம் பேச மாட்டார் என்றும் அவரிடம் இருந்து கட்டளை மட்டுமே வரும் என்றும் ஒரு கூட்டாளி கூறியுள்ளார்.

“மற்றபடி ஜாஃபர் சாதிக்கின் சகோதரர்கள்தான் எங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பர். வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்களைக் கடத்த உத்தரவிட்டதும் இவர்கள்தான்.

“கடத்தலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் துணி வாங்குவதுபோல் சென்னையில் உள்ள பாரிமுனை பகுதிக்கு வருவர். அங்கு நடக்கும் ரகசிய சந்திப்புகளின்போது பொருள்கள் பரிமாற்றம் நடக்கும்.

“வெளிநாடுகளுக்கு போதைப்பொருள்களை வெற்றி கரமாக கடத்தினால் ஜாஃபர் சாதிக் விருந்து அளிப்பார்.

“அவர் இப்படிப்பட்ட ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பதை யாராலும் எளிதில் கண்டுபிடிக்க இயலாது,” என்று ஜாஃபர் சாதிக் கூட்டாளிகள் அமலாக்கத் துறையிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தெரிகிறது.