×

பொங்கல் பண்டிகை: சில மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. 

 


பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.   

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை  மற்றும் காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர்.  இதில், பெரும்பாலானோர் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும். அந்தவகையில் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ந்தேதி தொடங்குகிறது.

அடுத்த ஆண்டு(2025)  ஜனவரி 13- ந்தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க் கிழமை), 15-ந்தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16- ந்தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு,  ஜனவரி 10-ந் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12-ந்தேதியும்(இன்று), ஜனவரி 11-ந் தேதிக்கு பயணம் செய்ய 13-ந்தேதியிலும், ஜனவரி 12-ந்தேதிக்கு வரும் 14-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13-ந்தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15-ந்தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்திருந்தது. இதனையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் அலுவலகம் முன்பு ஏராளமானோர் அதிகாலை முதலே காத்திருந்தனர்.  அதேநேரம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் சரியாக காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.  சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.