×

ஊழல் அதிகாரிகளால் ஆவின் பச்சை, ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி- பொன்னுசாமி

 

ஊழல் அதிகாரிகளாலும், நிர்வாக திறனற்ற அமைச்சர்களாலும் ஆவின் வரலாற்றில் கோலோச்சிய பால் வகைகளின் அரை நூற்றாண்டு சரித்திரம் முடிவிற்கு வருகிறது என பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின்‌ கூட்டுறவு பால்‌ நிறுவனமான ஆவின்‌ கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும்‌ மேலாக கடுமையான நிதியிழப்பை சந்தித்து வரும்‌ நிலையில்‌, அதன்‌ உண்மையான நிலவரத்தை மறைத்து "நிர்வாக காரணங்களுக்காக..." என்கிற ஒற்றை பொய்யை தூக்கிப்‌ பிடித்துக்‌ கொண்டு, 50ஆண்டுகால ஆவின்‌ வரலாற்றை முடிவிற்கு கொண்டு வரும்‌ வகையில்‌ 4.5% கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பால்‌ உற்பத்தி மற்றும்‌ விற்பனையை நிறுத்தும்‌ பணிகளை கடந்த பிப்ரவரி மாதம்‌ கோவையில்‌ தொடங்கி வைத்தது. 

அதனைத்‌ தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, காரைக்குடி, தஞ்சாவூர்‌ என பல மாவட்டங்களை கடந்து, சென்னையில்‌ மையம்‌ கொள்ள நினைத்து அது முடியாது போக இது (பச்சை) பாதி, அது (ஊதா) பாதி என ஆவின்‌ நிர்வாகம்‌ அர்த்தநாரிஸ்வரர்‌ அவதாரம்‌ எடுத்த நிலையில்‌ * வேலூர்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில்‌ பச்சை நிற பால்‌ பாக்கெட்டுகளின்‌ உற்பத்தி மற்றும்‌ விற்பனையை முழுமையாக நிறுத்தி இன்று (16.10.2023) முதல்‌ அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, தற்போது கூடுதல்‌ போனஸாக 30 ஆண்டுகால வரலாறாக நிலைத்து நிற்கும்‌ “நிறைகொழுப்பு பால்‌ உற்பத்தி மற்றும்‌ விற்பனையையும்‌ ஒருங்கிணைந்த வேலூர்‌ ஒன்றியத்தில்‌ நிறுத்தி ஆவின்‌ நிர்வாகம்‌ பேரதிர்ச்சி தந்துள்ளது,* மேலும்‌ அதற்குப்‌ பதிலாக 1.0% கொழுப்பு சத்து குறைவான "ஆவின்‌ டிலைட்‌" பாலினை பச்சை நிற பால்‌ பாக்கெட்‌ விலைக்கும்‌ (22.00) மற்றும்‌ "ஆவின்‌ கோல்டு" பாலினை ஆரஞ்சு நிற பால்‌ பாக்கெட்டின்‌ விலைக்கும்‌ (30.00) விற்பனை விலையாக நிர்ணயம்‌ செய்து லிட்டருக்கு 8.00 ரூபாய்‌ மறைமுக விலை உயர்வை பொதுமக்கள்‌ தலையில்‌ சுமத்தியும்‌, சத்து குறைவான பாலினை அதிக விலை கொடுத்து தான்‌ பொதுமக்கள்‌ வாங்கியாக வேண்டும்‌ எனவும்‌ வலுக்கட்டாயமாக திணித்து கூடுதல்‌ அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழகம்‌ முழுவதும்‌ விரைவில்‌ இதே நிலை அமுலுக்கு வரவுள்ள நிலையில்‌ இது ஊழல்‌  அதிகாரிகளாலும்‌, நிர்வாக திறனற்ற அமைச்சர்களாலும்‌ அரை நூற்றாண்டுகால ஆவின்‌ சாம்ராஜ்யம்‌ முடிவிற்கு வருவதையே உணர்த்துகிறது என்பதை தமிழ்நாடு பால்‌ முகவர்கள்‌ தொழிலாளர்கள்‌ நலச்‌ சங்கம்‌ மிகுந்த கவலையுடன்‌ பதிவு செய்கிறது. மேலும்‌ 4.5%கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால்‌ பாக்கெட்‌ விற்பனையால்‌ ஆவினுக்கு அதிக இழப்பு ஏற்படுவதால்‌ தான்‌ அந்த வகை பாலினை நிறுத்தி விட்டு, 1.0% கொழுப்பு சத்து குறைவான ஆவின்‌ டிலைட்‌ பாலினை அறிமுகம்‌ செய்துள்ளதாக கூறும்‌ பால்வளத்துறை அமைச்சர்‌ மனோ தங்கராஜ்‌ அவர்கள்‌, சமீபத்தில்‌ மத்திய அரசு வீடுகளுக்கான எரிவாயு சிலிண்டர்‌ விலையை 200.00 ரூபாய்‌ குறைத்ததை நன்கறிவார்‌. 

அவ்வாறு எரிவாயு சிலிண்டர்‌ விலையை மத்திய அரசு குறைத்ததால்‌ தங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படுவதாக கூறி 14. 2 கிலோ சிலிண்டர்‌ எடையை 2 கிலோ குறைத்து, அதே விலைக்கு 12.2கிலோ எரிவாயு சிலிண்டர்‌ என மாற்றினால்‌ மாநில அரசு தான்‌ ஏற்றுக்‌ கொள்ளுமா..? அல்லது ஆவின்‌ இழப்பை சரி செய்ய கொழுப்பு சத்து அளவை குறைத்து அதே விலைக்கு விற்பனை செய்வதை நியாயப்படுத்தும்‌ பால்வளத்துறை அமைச்சரான இவர்‌ தான்‌ அதனை வரவேற்பாரா..? என்பதை அவர்‌ தெளிவுபடுத்த வேண்டும்‌ அத்துடன்‌, கடுமையான நிதியிழப்பில்‌ ஆவின்‌ நிறுவனம்‌ செயல்பட்டு வருவதால்‌ அதனை ஈடுசெய்ய பச்சை மற்றும்‌ ஆரஞ்சு நிற பால்‌ பாக்கெட்டில்‌ கொழுப்பு சத்தை குறைத்து, பொதுமக்களுக்கு சத்து குறைவான, ஆனால்‌ அதே பழைய விற்பனை விலையிலேயே வழங்கி, மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தும்‌ நடவடிக்கையை மேற்கொள்ளலாம்‌ என ஆலோசனை சொன்ன அதிகாரிகளுக்கு 7வது நிதிக்குழு பரிந்துரையின்‌ படி ஊதியம்‌, அகவிலைப்படி வழங்காமல்‌, ஏற்கனவே 6வது நிதிக்குழு பரிந்துரைத்த பழைய ஊதியம்‌ மற்றும்‌ அகவிலைப்படி தான்‌ இனிமேல்‌ ஆவின்‌ மற்றும்‌ பால்வளத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும்‌ எனவும்‌, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு உயர்த்தி வழங்கிய ஊதியத்திற்குப்‌ பதிலாக பழைய ஊதியம்‌ தான்‌ பால்வளத்துறை அமைச்சருக்கு வழங்கப்படும்‌ என தமிழக அரசு உத்தரவிட்டால்‌ அதனை ஏற்றுக்‌ கொள்ள பால்வளத்துறை அமைச்சர்‌ மனோ தங்கராஜ்‌ அவர்களும்‌, ஆவின்‌ மற்றும்‌ பால்வளத்துறை அதிகாரிகளும்‌ ஒப்புக்‌ கொள்வார்களா..? என்பதையும்‌ தெளிவுபடுத்த முன்‌ வர வேண்டும்‌ என தமிழ்நாடு பால்‌ முகவர்கள்‌ தொழிலாளர்கள்‌ நலச்‌ சங்கம்‌ வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.