×

தமிழக அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி..!
 

 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகயில் நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல நாடுகள், பல ராஜாக்கள் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்துள்ளார்கள். 120 ஆண்டுகளுக்கு முன் எனது பாட்டி, பிஹாரின் ஒரு கிராமத்தில் இருந்து பல நாடுகளைக் கடந்து ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளார். காரணம், ராமேஸ்வரம் தன்னுடையது, ஒவ்வொருவருக்குமானது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அப்படித்தான் பல புண்ணிய தலங்கள் நாடு முழுவதும் உள்ளன.

ராமேஸ்வரம், ராமநாதபுரம் மன்னருக்கானது அல்ல. அது பாரதம் முழுவதும் வசிக்கும் மக்களுக்கானது. ராஜாக்கள், அவற்றின் பாதுகாவலர்கள் மட்டுமே. இதேபோல்தான் காசியும். இப்படித்தான் இந்த நாடு ஒரே நாடாகவும், அதேநேரத்தில் பல ராஜாக்கள் ஆளக்கூடியதாகவும் இருந்துள்ளது. பக்திக்காக மட்டுமல்ல, கல்விக்காகவும் ஒரு இடத்தில் இருந்து மக்கள் வேறு ஒரு இடத்துக்குச் சென்று வந்தார்கள்.

1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவ இளவரசர் 500 பேருடன் பிஹாரின் நாளாந்தா சென்றார். அங்கு கல்வி பயின்றார். பின்னர், அவரே ஒரு குருவாக உருவெடுத்தார். அவரே போதி தர்மரானார். யாரும் யாரையும் தடுக்கவில்லை. நீங்கள் வேறு ஒரு நாட்டைச் சேர்ந்தவர் என கூறவில்லை. பல்லவ இளவரசர் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் நாளந்தா தன்னுடையது என்று எண்ணினார்.

அதேபோல்தான் ஆதிசங்கரர். நினைத்துப் பாருங்கள் அவர் நாடு முழுவதும் பயணித்திருக்கிறார். ஒருவரும் அவரை தடுத்ததில்லை. சமூகம் அவரை வரவேற்றது. மக்கள் வரவேற்றார்கள். தற்போதைய அரசியலைக் கொண்டு இந்தியாவை புரிந்துகொள்ள முடியாது. இது ஒரு ராஷ்ட்ரம். ராஷ்ட்ரம் என்பது நாடு என்பதை கடந்த ஒன்று.

கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார்.

துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஒரு ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது.

தமிழ்நாடு சந்தித்து வரும் மற்றொரு பெரிய பிரச்சனை போதைப் பொருள்கள். ஆனால், போதைப் பொருள்கள் பெரிய பிரச்சினை இல்லை என்று மறுக்கக்கூடிய நிலை இங்கே இருக்கிறது. கோகெய்ன், ஹெராயின், மெத் என ரசாயண போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் இத்தகைய போதைப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதனை நாம் மறுப்பதால் பயனில்லை. இது நடக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு, இதற்கு தீர்வு காண வேண்டும். ஆசிரிய சமூகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் தவறான பாதையில் சென்றால், அது குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆசிரியர் தினம் இதற்கான உறுதியை எடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மணவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.

மாணவர்களை பெரிதாக கனவு காண வைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். பல மாணவர்களிடம் பெரிய கனவுகள் இல்லை. தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள்கூட, சராசரி வேலை குறித்த கனவையே கொண்டிருக்கிறார். பலரின் கனவுகள் சிறியதாக உள்ளன. ஆலமரத்தின் விதையைப் போன்றவர்கள் மாணவர்கள். ஆனால், பலர் அதனை உணராமல் போய்விடுகிறார்கள்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.