×

கோவையில் போஸ்டர் யுத்தம்- மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை

 

கோவையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போஸ்டர்களை ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கோவையில் கடந்த சில தினங்களாக அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் போஸ்டர்கள் மூலமாக மோதிக் கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கோவை மாநகரில் திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. 

இதனை அடுத்து பாஜக சார்பில் சனாதனத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் அடுத்தடுத்து கருத்து மோதல்களை போஸ்டர்கள் மூலமாக கட்சியினரும், அமைப்புகளும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வுகள் கோவை மாநகரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கோவை மாநகர போலீசார் தெரிவித்ததோடு, பிரச்சனைகளை தூண்டும் வகையில் போஸ்டர்கள் அச்சிடும் அச்சக உரிமையாளர்கள், அவற்றை ஒட்டுபவர்கள் மற்றும் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் பிரச்சனைகளை தூண்டும் வகையான வார்த்தைகளுடன் போஸ்டர்கள் அச்சடிக்க வரும்போது அச்சக உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். அதனையும் மீறி போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்வதோடு உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.