சென்னை முழுவதும் தீடீர் மின்வெட்டு.. தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்..
மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளத்து. அத்துடன் பாதிப்பு 100 % சீர் செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னையின் மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில், உயர் அழுத்த மின் கோபுரத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பின்னர் சில மணி நேரங்களில் பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு இரவு 2 மணியளவில் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்துள்ள விளக்க அறிக்கையில், “நேற்றிரவு மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. ஆனால், தீ விபத்தில் இரண்டு ஃபீடர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் சென்னைக்கு மின் விநியோகம் தடைபட்டது.
இருப்பினும் மின்சார வாரியம் துரிதமாக செயல்பட்டு மாற்றுப் பாதைகளில் மின் விநியோகம் செய்து படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் மீண்டும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தது. வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கி ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்பாக தன்னை நிலைநாட்டியுள்ளது. மின் தடை காரணமாக சென்னையில் அத்தியாவசியத் தேவைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. தற்போது மின் சேவை 100 சதவீதம் சீர் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிகப்பட்டுள்ளது.