×

பிரகாஷ்ராஜ் வெளியிட்ட சர்ச்சை கார்ட்டூன்..! வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு மோடிதான் காரணமா ? 

 

இந்தியாவில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக, பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் மீதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீதும் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்த போது பிரகாஷ் ராஜின் கிண்டல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அத்துடன் அவர் மீது கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ள கார்ட்டூன் பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி வரை வந்து சாதனை படைத்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தங்கப்பதக்கம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் அதிகரித்ததால் ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் ஏமாந்து போயினர். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மனம் உடைந்து போன வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட கார்ட்டூன் புகைப்படத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ‘அதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று தலைப்பிட்டுள்ளார். எடைசரிபார்ப்பு இயந்திரத்தில் வினேஷ் போகத் பின்புறம் நரேந்திர மோடி பின்னால் இருந்து எடை இயந்திரத்தின் மீது காலை வைத்த அழுத்துவது போன்ற இந்த கார்ட்டூன் உள்ளது. இதன் மூலம் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று பிரகாஷ் ராஜின் பதிவு உணர்த்துகிறது.

பிரகாஷ் ராஜின் பதிவிற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “ஒரு இத்தாலிய மல்யுத்த வீரரும் அதிக எடை காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது தகுதி நீக்கத்தில் பிரதமர் ஜார்ஜியா மலோனி தொடர்புள்ளாரா,” என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். “நீங்கள் ஒரு நகர்ப்புற நக்சல்” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட கார்ட்டூன்