×

கனமழையை திறம்பட எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை.. ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.. 

 

 கனமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.  

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து அத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், கனமழையினை காரணமாக பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

> கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


> அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
> தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள், JCB இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
> முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினைச் சார்ந்த 335 வீரர்கள் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் முன் கூட்டியே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
>அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது, பொதுமக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து, வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி அணைகளிலிருந்து உபரி நீரை வெளியேற்ற நீர் வள ஆதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
> பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்து தீர்வு காணும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.