×

வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

 

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.   
இந்த நிலையில், சட்லெஜ் ஆற்றில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரை சாமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இரங்கல் செய்தியில், முன்னாள் சென்னை மேயர், மனித நேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.