×

விஜய் கட்சி தொடங்கியதால் தீயாய் வேலை செய்கிறதா திமுக- பிரேமலதா பதில்

 

அவரவர் கட்சி பணிகளை அவரவர் செய்து வருகின்றனர், யார் வருவதாலும் யாரும் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விஜய் கட்சி தொடங்கியதால் திமுக தீவிரமாக வேலை பார்ப்பதாக எழுப்பிய கேள்விக்கு தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா பதில் அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, “செயற்குழு, பொதுக்குழு கூட்டி மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைகள் செய்யப்பட்டு விஜயபிரபாகரனுக்கு உரிய பதவி அறிவிக்கப்படும். மருத்துவர் பாலாஜி உட்பட தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது.
பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம், ஆசிரியர்களே குடிக்கு அடிமையாக்குவது கண்டிக்கத்தக்கது. வாய் வார்த்தைகளை பேசி கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சி நடத்தி வருகிறார்கள். மழை வரவுள்ள சூழலில் தொலைநோக்கு திட்டம் இல்லை. வரவுள்ள மழை, வெள்ளத்திற்கு முன்னேற்பாடுகள் இல்லை. சாலைகள்  அனைத்தும் சேதமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவு தான் திராவிட மாடல் ஆட்சியா? தேமுதிக, அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து நிறைவேற்றவில்லை என மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தொடர்ந்து கஷ்டத்தில் உள்ளனர்.ரேஷன்ல் பொருட்கள் இல்லை, வேலை இல்லை அனைத்து பிரச்சினைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் குளறுபடி உள்ளது, போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

விஜய் கட்சி தொடங்கியதால் திமுக தீவிரமாக வேலை பார்ப்பதாக எழுப்பிய கேள்விக்கு யார் வருவதாலும் யாரும் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது, அவரவர் கட்சி பணிகளை அவரவர் செய்து வருகின்றனர் என தெரிவித்தார். உதயநிதி செயல்பாடு குறித்த கேள்விக்கு யாரோ எழுதி கொடுத்ததை பார்த்து படிப்பதிலேயே தடுமாற்றம், ஓராயிரம் குளறுபடி நடைபெறுகிறது எனவும் முதல்முறையாக துணை முதல்வராக வந்துள்ளார் பார்க்கலாம் என தெரிவித்தார்.