×

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்- பிரேமலதா விஜயகாந்த

 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, தருவைக்குளம் கிராமத்தை சேர்ந்த அரசின் ஒத்துழைப்போடு விசைப்படகில் மீன்பிடித் தொழில் செய்து வரும் அந்தோணி மகாராஜா, அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜூலை மாதம் 20ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை இலங்கையைச் சேர்ந்த கடற்படையினரால் விசைப்படகையும், மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும் இலங்கை அரசால் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும், மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குநர் அவர்களிடமும் முறையாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது பெரும் வேதனையளிக்கிறது. செவுள்வளை என்றும் பருவலை என்றும் அழைக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலானது சர்வதேச எல்லை வரை சென்று வர 25 நாட்களுக்கு குறையாமல் கடலிலேயே தங்கி மீன் பிடிக்கும் ஆழ்கடல் தொழிலாகும். இந்த விசைப்படகில் உள்ள வலைகளின் நீளம் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும். 

கடலில் விடப்பட்ட வலையானது காற்றின் திசை நோக்கியே செல்லும். அந்த சமயத்தில் எந்தக் கடல் பகுதியென்று அறிவது சிரமம். எனவே சில நேரங்களில் சர்வதேச எல்லையைத் தொடுவதும் உண்டு. அதனால் எல்லையை தாண்டுவதும் மீனவர்களால் திட்டமிட்டு நடப்பது இல்லை. தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்வது பின்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதை தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க, தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.