×

களைக்கொல்லி மருந்தை குடித்த கைதி! மேலும் ஒரு கைதி தூக்கிட்டு தற்கொலை

 

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி மருத்துவமனையில் களைக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், மற்றொரு கைதி சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏரி குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 300க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற 46 வயது கைதி சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சிறையில் அவருக்கு வலிப்பு நோய் ஏற்படவே அவரை சிறை காவலர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் ஐசியுவிலிருந்த ரமேஷ் தனது படுக்கையின் அடுத்த படுக்கையில் களைக்கொல்லி மருந்தை அருந்திய நோயாளி ஒருவர் மாதிரிக்காக கொண்டு வந்திருந்த களைக்கொல்லி மருந்து பாட்டிலை அவருக்கு தெரியாமல் எடுத்து பின்னர் அதனை கழிவறைக்கு சென்று அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ரமேஷ் இன்று காலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மாடு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 5ம் தேதி இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஞ்சை மாவட்டம் துறவிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற 21 வயது இளைஞர் இன்று சிறை வளாகத்தில் உள்ள மாமரத்தில் ஏறி மேலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அவரை மீட்ட சிறை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த புதுக்கோட்டை சிறை கைதி  களைக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் மற்றொரு கைதி சிறை வளாகத்திலிருந்த மரத்திலிருந்து ஏரி குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.