×

நெசவாளர்களுக்கு தொழில் வரி என்பது உண்மைக்கு புறம்பானது: அமைச்சர் காந்தி!

 
கைத்தறித் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித் துறையினால் எவ்வித அறிவிப்போ அரசாணையோ வெளியிடப்படவில்லை. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கடித ந.க.எண்.26821/ஆர்-1/2024 நாள் 06.11.2024–ன்படி அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மின்சார வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என கண்டறிய மாநகராட்சிகள் மற்றும் மண்டல நகராட்சி வாரியாக ஆய்வு செய்து கேட்பு உயர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை தவிர) மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் ஊராட்சி ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை சதுர அடிக்கான தொழில்வரி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, குடிசைத் தொழில் போல வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

பருத்தி நூல், பட்டு நூல், கம்பளி மற்றும் கலப்பின நூல் ஆகிய நூல் கொள்முதலுக்கு 15% விலை மானியத்துடன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட நூற்பாலைகளிலிருந்து தரமான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தரப்பரிசோதனை செய்யப்பட்டு கைத்தறி துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நூல்கள் மானியத்துடன் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.54.42 கோடி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது . மேலும், மாதந்தோறும் நூல்விலை நிர்ணயக் குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு நூல்விலை கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. எனவே, நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்றதாகும்.

சீருடை வழங்கும் திட்டம்: தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியால் விலையில்லா சீருடை மற்றும் விலையில்லா வேட்டி சேலை திட்டங்கள் எவ்வித தொய்வுமின்றி தமிழக நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, 2024-2025-ன் திட்டத்தின் கீழ் 10883 எண்ணிக்கையிலான தறிகள் ஈடுபடுத்தப்பட்டு 524.35 லட்சம் மீட்டர் அளவிலான சீருடைத் துணிகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேட்டி சேலை வழங்கும் திட்டம்: விலையில்லா வேட்டி சேலை திட்டத்தினைப் பொறுத்தமட்டில் உற்பத்திக்கு தேவையான தரமான நூல்கள் மூலமாக பொங்கல் 2025–க்கு 177.64 லட்சம் எண்ணிக்கையிலான சேலைகள் மற்றும் 177.22 லட்சம் எண்ணிக்கையிலான வேட்டிகள் 2391 எண்ணிக்கையிலான கைத்தறிகள், 12040 எண்ணிக்கையிலான பெடல்தறிகள் மற்றும் 54193 எண்ணிக்கையிலான விசைத்தறிகளின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் மட்டுமே உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு பல்வேறு தரப் பரிசோதனைகள் செய்யப்பட்டு கொள்முதல் செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் நாளன்று வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நெசவாளர்களுக்கான வாழ்வாதாரம் நிலை நிறுத்தப்பட்டு, வாழ்க்கைத்தரம் மேம்பட, தமிழ்நாடு அரசு சீரிய முறையில் பணியாற்றி வரும் நிலையில், விலையில்லா வேட்டி சேலை மற்றும் விலையில்லா சீருடை திட்டங்களை தமிழ்நாடு நெசவாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டும், வெளிமாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகளை குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டும், மூன்றில் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதும் ஆகும்.

வெளிமாநில தரமற்ற போலி ஜவுளிகள்: கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம், 1985-இன்படி கைத்தறித் துறையின் அமலாக்கப் பிரிவு மூலமாக திருச்செங்கோடு, சேலம் மற்றும் ஈரோடு சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2023-2024 ஆம் ஆண்டில் 47710 விசைத்தறிகள் ஆய்வு செய்யப்பட்டு 76 வழக்குகளும் மற்றும் நடப்பு ஆண்டில் அக்டோபர் 2024 வரை 26 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, மாதந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதன் மூலம் போலியாக வெளிமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி இரகங்கள் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே, வெளி மாநிலங்களிலிருந்து போலியாக தரமற்ற சேலைகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானதாகும்.

இலவச மின்சாரம்: கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் இக்கழக ஆட்சியின் போது தான், 2006-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இரண்டு மாதத்திற்கு முறையே 200 அலகுகள் மற்றும் 750 அலகுகள் மின்சாரம் என்பதை 03.03.2023 முதல் முறையே 300 அலகுகளாகவும், 1000 அலகுகளாகவும் உயர்த்தி தற்போதைய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 75364 கைத்தறி நெசவாளர்களும், 1,62,799 விசைத்தறி நெசவாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

வீடுகட்டும் திட்டம்: கடந்த அதிமுக ஆட்சியல் நெசவாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.2.60 லட்சம் மட்டுமே ஒரு நெசவாளருக்கு வழங்கப்பட்டது. ஆனால், இக்கழக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் நலன் கருதி, வீடு இல்லாமல் உள்ள கைத்தறி நெசவாளர்கள் வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தி, நகர்ப்புற மற்றும் ஊரக நெசவாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வரையில் நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 1950 கைத்தறி நெசவாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, 810 கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டு இதுவரையில் 643 பயனாளிகளுக்கு 17.04 கோடி மானியத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 288 பயனாளிகள் வீடுகளை முழுவமாக கட்டியுள்ளனர். எஞ்சியுள்ள 1140 பயனாளிகளின் தகுதியின் அடிப்படையில் விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

மேலும், கிராமப்புறத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் AWASS PLUS பட்டியலில் இடம் பெற்ற தகுதியான 22 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறத்தில் Awaas Plus பட்டியலில் இடம் பெறாத பயனாளிகளில் “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தின்கீழ் 2392 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக இவ்வரசு தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

இவற்றைத் தவிர, கிராமப்புற பகுதிகளில் சிதிலமடைந்த நிலையில் உள்ள நெசவாளர் வீடுகளை புனரமைக்க ஏதுவாக 151 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஊரக வளர்ச்சித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, நெசவாளர்களுக்கு எந்த திட்டத்தின் கீழும் இவ்வரசால் வீடுகள் கட்டித் தரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானதாகும்.

தள்ளுபடி மானியம்: இக்கழக ஆட்சியின் போது தான், 1998 ஆம் ஆண்டு முதல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆண்டு முழுவதும் கைத்தறித் துணி விற்பனையில் 20 விழுக்காடு தள்ளுபடி வழங்கவும், 2001 ஆம் ஆண்டு முதல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை 139 நாட்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு சேர்த்து 30 விழுக்காடு தள்ளுபடி மானியம் வழங்கவும் ஆணையிடப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படாமல் விட்டுச் சென்ற நிலுவைத் தொகை ரூ.160 கோடியினை, இக்கழக அரசு 2021 ஆம் ஆண்டில் முழுவதுமாக விடுவித்துள்ளது. இவ்வரசு 2021-2022 முதல் 2024-2025 ஆம் ஆண்டு 31.10.2024 முடிய ரூ.794.25 கோடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ்-க்கு விடுவித்துள்ளது என்பது இவ்வரசின் சாதனையாகும்.

கூலி உயர்வு கைத்தறி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும், அவ்வப்போது உயர்ந்து வரும் சந்தை நிலவரத்தினை கருத்தில் கொண்டும் கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி நெசவு தொழில் ஈடுபடும் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் அவ்வப்போது அடிப்படைக்கூலி மற்றும் அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றவுடன் ஆண்டுதோறும், கீழ்க்கண்டவாறு கூலி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கூலி உயர்வு வழங்கப்பட்ட நாள் அடிப்படை/ அகவிலைப்படி கூலி உயர்வு சதவிகிதம் :

01.01.2022 அடிப்படைக் கூலியில் (Basic Wages) 10% உயர்வு
மற்றும் அகவிலைப்பயில் (DA) 10% உயர்வு
01.05.2023 அடிப்படைக் கூலியில் (Basic Wages) 10% உயர்வு
01.08.2024 அகவிலைப்படியில் (DA) 10% உயர்வு.

மேலும், 2024-2025 ஆம் ஆண்டுக்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான கோ- ஆப்டெக்ஸ் உற்பத்தி திட்டத்தின்கீழ் ரூ.90 கோடி அளவிற்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கோ-ஆப்டெக்ஸ் ஆர்டரே தருவதில்லை என்பது உண்மைக்கு புறம்பானதாகும்.தேர்தல் அறிக்கை 2021-இல் கைத்தறித் துறைக்காக அளிக்கப்பட்ட மொத்தம் 13 வாக்குறுதிகளில் 12 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இவ்வரசு பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் சுமார் 90% தேர்தல் வாக்குறுதிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் இதர முன்னெடுப்பு நடவடிக்கைகள்: மேற்கண்ட நலத்திட்டங்களைத் தவிர கைத்தறி தொழிலை பாதுகாக்கவும், கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நலனை மேம்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் கீழ்கண்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

I. தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பெறும் நடைமுறை மூலதன கடன் தொகைக்கான வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியம் (Interest Subsidy) சங்கங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.14.73 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

II. கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் இது வரை கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.29.04 கோடி மதிப்பில் 30,227 தறிகள் மற்றும் தறி உபகரணங்களும், (Looms and Accessories) மற்றும் 434 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.30 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

III. 10 சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom parks) அமைக்க அரசால் திட்டமிடப்பட்டு, தற்போது காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 இரண்டு இடங்களில் கைத்தறி பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

IV. ஆரணி பகுதியில் 5000 பட்டு நெசவாளர் பயன் பெறும் வகையில் 20.53 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.44 கோடி செலவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா (Handloom Silk Park) நிறுவப்படவுள்ளது.

V. நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் (Weavers Mudra Scheme) கடந்த 3 ஆண்டுகளில், 37455 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.191.67 கோடி, வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக செயல்படுத்தி வருகிறது.

VI. கைத்தறி நெசவாளர்களுக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.1000/- லிருந்து ரூ.1200/- ஆக 01.08.2023 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

VII. நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள் சேமிப்புத் தொகை முழுவதையும் பெறுவதற்கான கால அளவினை 25 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக 05.07.2023 முதல் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இவ்வரசு பொறுப்பேற்றது முதல், வேறு எந்த அரசை விடவும், நெசவாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி, பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி வரும் நிலையில், இவற்றை ஏதும் அறியாத சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அவரின் பல்வேறு தேதியிட்ட கைத்தறி துறை தொடர்பான அறிக்கைகளுக்கு நான் தக்க பதிலடி கொடுத்திருந்தும், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், வாய்க்கு வந்தவாறு செவிவழிச் செய்திகளைக் கேட்டு, உரிய தரவுகள் ஏதுமின்றி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை சுய இலாபம் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தரம் தாழ்ந்த அரசியலில், கண்ணியமற்ற முறையில், மலிவாக ஈடுபடுவதை நான் வன்மையாக கண்டிப்பதுடன், அவர் இம்மாதிரியான நடவடிக்கைகளை இனிமேலாவது கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.