×

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

 

பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை விதித்துள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப்பொருள் மூலம் சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கூடாது எனவும், அமோனியம் மெர்குரி போன்று பிளாஸ்டர் ஆப் பாரிஸும் நச்சு பொருள்தான் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கலப்பதால் புற்று நோய்கள் அதிக அளவில் ஏற்படுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை; எல்லாம் விஷமே என்றனர். ஆகவே பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்க, நீர் நிலைகளில் கரைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நேற்று வழங்கப்பட்ட தனி நீதிபதி ஸ்வாமிநாதன் உத்தரவுக்கு எதிராக அரசு சார்பில்  செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு  தடை விதித்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல் படியும் நீதிமன்ற உத்தரவுகளின் படியும் கெமிக்கல் விநாயகர் சிலைகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்தது சரிதான் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.