பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்திடுக!!
 

 
GK Vasan

தமிழக அரசு, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுத்தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சுப் பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதாவது மாநில முழுவதிலும் புள்ளி விவரங்களை சேகரிப்பதிலும் தொகுப்பதிலும் மற்றும் ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபடுதல் ஆகியவை இத்துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்துறையில் நிர்வாகம் மற்றும் கணக்குப் பிரிவுகளில் ஈடுபடும் அனைத்து அமைச்சுப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்பு விதிகளின்படி, போதுமான பதவி உயர்வு இருந்துள்ளன. துறை மறுசீரமைப்பு செய்யப்பட்டதன் காரணமாக, தொழில்நுட்பப் பணியாளர்களின் பதவி உயர்வு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

gk vasan

ஆனால், நிர்வாகப் பணியாளர்களுக்கு பணிமாற்றல் முறையில் வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வு வாய்ப்புகள் உயர்கல்வித் தகுதி காரணமாக விதித்திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனால் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு வாய்ப்புகள் 2013 ஆம் ஆண்டு முதல் எதிர்பாராமல் இரத்து செய்யப்பட்டன. பின்னர், இது தொடர்பாக தங்களுக்கு பிற அரசு துறைகளில் உள்ளது போல், அமைச்சுப் பணியாளர்களுக்கு தனி அமைப்பு உருவாக்கித் தர வேண்டுமென்று, துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மூலம் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஏற்கனவே 50 ஆண்டுகளாக அமைச்சுப் பணியாளர்கள் அனுபவித்த 20% உள்ஒதுக்கீட்டு மொத்தப் பணியிடங்களான 156 பணியிடங்களில் 104 பணியிடங்கள் தொழில்நுட்பப் பதவிகளாக உள்ளதால், அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல், மீதமுள்ள 52 நிர்வாகப் பணியிடங்களில் உயர்கல்வி முடித்த தொழில்நுட்பப் பணியாளர்கள் பணியாற்றுவதால், அரசு விதிப்படி அப்பணிகளை பார்க்க வேண்டிய அமைச்சுப் பணியாளர்களுக்கு, பதவி மாற்றம் மூலம் வழங்குவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அரசு திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை, மனித வள மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகள் ஒப்புதல் அளித்த நிலையில், அரசுக்கு ரூ. 6.47 இலட்சம் மிச்சம் தரக்கூடிய இப்பரிந்துரை, தமிழக அரசின் நிதித்துறை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் உரிய அரசாணை வெளியிட ஏதுவாக இருக்கும். எனவே தமிழக அரசு, கடந்த பதினோரு ஆண்டுகளாக பதவி உயர்வு வாய்ப்புகள் இல்லாமல் உள்ள அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலிக்குமாறு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.