×

பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

 

முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் நிதி நிறுவன இயக்குனர் தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்  இருந்து வருகின்றனர்.  தேவநாதன்  மீது  300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து தேவநாதனின் 5 வங்கி கணக்குகள் உள்பட   நிதி நிறுவனத்தின் 18  வங்கி கணக்குகள், குணசீலன் மற்றும் மகிமைநாதனின் தலா 2 வங்கிக் கணக்குகள் என மொத்தம் 27 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.  ஏற்கனவே   நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக  தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவன, அடையாறு, வண்ணாரப்பேட்டை ,சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்கள் என  8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில்  தேவநாதனை  ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன் அடிப்படையில் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தேவநாதனிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . மோசடி செய்த பணத்தில் பினாமிகள் பெயரில் அவர் எந்தெந்த ஊர்களில் அசையா சொத்துக்களை வாங்கினார்,  வேறு என்னென்ன தொழில்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்து இருக்கிறார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் குடும்பத்தினர் பெயரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவர் செய்திருக்கும் முதலீடுகள் குறித்தும் போலீசார் விவரங்களை திரட்டி வருகின்றனர்.