வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம்- முக்கிய குற்றவாளி கைது
4 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் காட்டிய விபச்சார கும்பல் தலைவனை கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆவாரம்பாளையம் அருகே சாலையில் சென்ற நபரிடம் ரூ.4,500 பறித்ததாக போத்தனூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர். அவரை போலீஸார் பிடிக்க சென்ற போது தப்ப முயன்றதில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஸ்டீபனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு அதிர்ச்சியான தகவல் வெளியானது.
குறிப்பாக ஸ்டீபன் மதுரை மாவட்டம் தேனியை சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா என்பவரிடம் மேலாளராக பணியாற்றி வந்ததும், இவர்கள் ரஷ்யா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களை சுற்றுலா பயணிகள் போல அழைத்து வந்து தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் பாலியல் தொழில் மூலம் மாதம் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி வந்த சிக்கந்தர் பாஷா தமிழகத்தில் உள்ள பல்வேறு ரவுடி கும்பலுக்கு வங்கி கணக்கு மூலம் நிதியளித்து வந்தத்தையும் போலீஸார் விசாரணையில் கண்டறிந்தனர்.
இந்நிலையில் சிக்கந்தர் பாதுஷா குறித்தான பல்வேறு விவரங்களை சேகரித்த போலீஸார் கொல்கத்தா மாநிலத்தில் பதுங்கி இருந்த அவரை பிடிக்கச் சென்ற போது அவர் துபாய்க்கு தப்பிச் சென்றார். இதையடுத்து தொடர்ந்து போலீஸார் தொடர்ந்து சிக்கந்தகர் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து கண்காணித்து வந்தனர். விமான நிலையங்களுக்கும் அலார்ட் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துபாயில் இருந்து சென்னை வந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அவரை பின் தொடர்ந்த போலீஸார் மதுரை மாவட்டத்தில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீஸார் பார்த்ததும் தப்ப முயன்ற சிக்கந்தர் பாதுஷாவின் காலிலும் எழும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கோவை அழைத்து வந்த போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதுஷா சுமார் 40 வழக்குகளிலும், ஸ்டீபன் சுமார் 20 வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
அதே போல சிக்கந்தர் பாஷா பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்களுடன் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்ததால், அவரது செல்போனில் உள்ள விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். இந்த கைது மூலம் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் விபரங்களையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர். மேலும் 171 நபர்கள் உள்ள வாட்ஸ் அப் குழு மூலம் விபச்சார தொழிலில் ஈடுபட்ட பாதுஷாவிடம் இருந்து 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.