×

தவெக மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை- புதுவை முதல்வர் ரங்கசாமி

 

நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை, அழைத்தால் செல்வது குறித்து சிந்திக்கலாம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி அளித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, “மக்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ள நியாயவிலைக் கடைகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி அனைத்து நியாயவிலைக் கடைகளையும் தீபாவளிக்கு முன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைகள் மூலம் தீபாவளிக்கு இலவசமாக 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும். கடைப்பணியாளர்களுக்கான முதல் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். அதற்காகத் தொடர்ந்து நிதி அளிக்கப்படும். தற்போது
ரூ.1.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசி, சர்க்கரைக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதையடுத்து 20 கிலோ அரிசி மற்றும் சர்க்கரையும் வழங்கப்படவுள்ளன. இலவச அரிசி முதலில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது. வீடு வீடாகச் சென்று அரிசியை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.

புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து தீர்மானமானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக பிரதமரைச் சந்திக்கும் எண்ணம் உள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். அவர் நன்றாக வளர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். மேலும் மேலும் அவர் உயர வாழ்த்துகிறேன். அவரது கட்சி மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை. அழைத்தால்
செல்வது குறித்து சிந்திக்கலாம்” என்றார்.