×

ஓபிஎஸ் நாங்க சொல்ற எதையும் கேட்கவில்லை; அண்ணாமலை சொன்னதையே கேட்டார்- புகழேந்தி

 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோகும் என்றும் அடுத்த தேர்தலோடு கட்சியும் காணாமல் போகும் என்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய புகழேந்தி, “விரைவில் அதிமுக ஒருங்கிணையும். அதற்காக ஒன்றியம் வாரியாகவும், தேவைப்பட்டால் கிராமம் தோறும் சென்று தொண்டர்களை சந்தித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோவதோடு அடுத்த தேர்தலோடு கட்சியும் காணாமல் போய்விடும்.

பாமக, பாஜக, நாம் தமிழர் என அனைத்து கட்சிகளும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரின் புகழ் பாடி மக்களை சந்திப்பது இயக்கத்திற்கு கிடைத்த பெருமை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிட இயக்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். தனித்துவத்தோடு இயக்கத்தை நடத்தும் சீமான் தற்போது ஏன் அதிமுகவின் வாக்குகளை கேட்கிறார்? சீமானிடம் ஏன் இந்த மாற்றம்? பழனிசாமி என்று கூறினால், மக்கள் எதிர்த்து தான் ஓட்டு போடுவார்கள் என்று சீமான் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை தமிழகத்தில் பெரியாரின் படத்தை எடுத்துக் கொண்டு வந்தால் தான் தமிழ்நாட்டில் பாஜக வளரும். 

தேனியில் போட்டியிடும் படி ஓபிஎஸ்-ஐ வலியுறுத்தினேன். ஆனால் ஆண்ணாமலை சொன்னார் என்று தான் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டார். போட்டியிட்டால் தோற்பீர்கள் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூட கூறினார். ஆனால் ஓபிஎஸ் எதையும் கேட்கவில்லை, யார் சொல்லியும் கேட்கவில்லை” என்றார்.