×

சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்று சேராவிட்டால் அதிமுக தொண்டர்கள் துரத்தி துரத்தி அடிப்பர்- புகழேந்தி

 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி இன்று, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “தந்தை பெரியாரின் புகழ் வடமாநிலங்கள் வரை பரவியுள்ளது. அவரது பெயரை தினந்தோறும் பலர் கூறும் வகையில் சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு, அவர் பெயரை வைக்கும் வகையில் பெரியார் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதிமுக-வை ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழுவை ஆரம்பித்தோம். ஆனால் பல குழுக்களாக பிரிந்து, குற்றம் சாட்டினால் சரிவராது. எம்.ஜி.ஆர், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட போது, தந்தை பெரியார், கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதைபோல நாங்களும் முயற்சி செய்கிறோம். துரோகம் செய்கிறார் இ.பி.எஸ்., என பலமுறை கூறிவிட்டோம். 

சசிகலா அவ்வப்போது வெளியில் வந்து அ.தி.மு.க.வை சேர்த்து வைக்கிறேன் எனக்கூறி உள்ளே சென்றுவிடுகிறார். அவர் இறங்கி வர வேண்டும். ஓ.பி.எஸ்., சசிகலாவை நேரில் சந்திக்க வேண்டும். நாங்கள் யாரையும் ஆயுதம் கொண்டு மிரட்ட முடியாது. இவர்கள் அனைவரும் வாயில் வடை சுடுகிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். அ.தி.மு.க., லோக்சபா தேர்தலில், 7 தொகுதிகளில் மூன்றாவது இடத்திலும், 12 தொகுதிகளில் டெபாசிட் காலி என அண்ணாமலை விமர்சிக்கும் நிலையில் உள்ளது. இதையெல்லாம் அ.தி.மு.க., தலைவர்கள் நினைத்து பார்த்து ஒன்று சேரவேண்டும். சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.,சை அழைத்து பேச வேண்டும். வரும் 2026ல், அ.தி.மு.க., படுதோல்வியடைந்தால் எங்களையும் சேர்த்து தொண்டர்கள் துரத்தி துரத்தி அடிப்பார்கள். பொறுப்பை உணர்ந்து, தொண்டர்களின் கருத்தை மதித்து நடக்க வேண்டும். 

இது ஒரு புறம் இருந்தால் டி.டி.வி., தினகரன் தனிக்கட்சி நடத்துகிறேன் என்கிறார். பல அ.தி.மு.க., தலைவர்கள் பா.ஜ.க., அரசுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க., ஆட்சி விரைவில் வரும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன், சில அ.தி.மு.க.,வினர் கூட்டு சேர்ந்தால் எப்படி இருக்கும். அ.தி.மு.க.,வினர் பார்க்காத பணமில்லை. அனைத்தையும் அனுபவித்துவிட்டனர். கட்சியை காப்பாற்றுங்கள். பிரஸ்டிஜ் பார்க்காதீர்கள் என வலியுறுத்துகிறோம். அ.தி.மு.க.,வில் பல்வேறு பதவிகளை அனுபவிக்கும் கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ்., போல் தலைவர் இல்லை. மோடி போல் உலகளவில் சிறந்த பிரதமர் இல்லை. இன்றைக்கு திருப்பி பேசுகிறார். அவருக்கு எது அனுகூலமோ, அவரை வாழவைக்கிறதோ, அவருக்கு வரவேற்பு இருக்கிறதோ அங்கு சேர்ந்து கொண்டு பேசுபவர்தான் முனுசாமி” என்றார்.