×

21 கேள்விகளும் பதில் அளிச்சிட்டோம்... திட்டமிட்டபடி வரும் 23ல் மாநாடு: புஸ்ஸி ஆனந்த் 
 

 

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவண்டி அருகேயுள்ள வி.சாலையில் 23 ஆம் தேதி நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல் துறை சார்பில் மாநாடு நடத்த 21 நடைமுறை கேள்விகள் கேட்கபட்டதற்கு பதில் விளக்கத்தினை விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சுரேஷிடம்  தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.


தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலையில் 85 ஏக்கர் பரப்பளவில் வருகின்ற 23-ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம்  எஸ்பி அலுவலகத்தில் கடந்த 28-ஆம் தேதி அக்கட்சியின் பொதுசெயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் சென்று  மனு அளித்தனர். தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மனுவில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து குறிப்பிடவில்லை என்பதால் மாநாடு நடத்துவதற்கான நடைமுறை  ஏற்பாடுகள் குறித்து விளக்கங்களாக 21 கேள்விகள் கடந்த 2 ஆம் தேதி கேட்கப்பட்டு நோட்டீஸ் விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளர் காத்தமுத்து மூலமாக டிஎஸ்பி சுரேஷ் தமிழக வெற்றி கழக பொதுசெயலாளரிடம் வழங்கினர். இதற்கான பதில் மனுவை ஐந்து தினங்களுக்குள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்றுடன் காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைவதால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் விஓசி நகரிலுள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சுரேஷிடம் 21 கேள்விகளுக்கும் பதில் அளித்து மனுவாக வழங்கினர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த், “மாநாடு நடத்த காவல் துறை சார்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கு பதில் அளித்து மனு தரப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி வழங்கியபின் மாநாடு நடைபெறுவதற்கான அதிகாரபூர்வ தேதியினை விஜய் வெளியிடுவார். நல்ல பதில் காவல்துறையிடமிருந்து கிடைக்கும்  என எதிர்பார்க்கிறோம். மாநாடு நடத்த கேட்கப்பட்ட 21 கேள்விகளில் 23 ஆம் தேதி மாநாடு நடைபெற அனுமதி வழங்கினால் நண்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறும். முதியவர்களுக்கு இருக்கைகள் தனியாக அமைக்கப்படும், உணவு மாநாடு திடல் பகுதியிலையே சமைத்து வழங்கப்படும், தண்ணீர் வசதி கழிவறை வசதி, ஆம்புலன் வசதி ஏற்படுத்தி தரபடும். காவல் துறையினர் 21 விளக்கங்களை பரிசீலனை செய்த பின்னரே மாநாட்டிற்கான அனுமதி கொடுப்பதா ? இல்லையா ? என்பது தெரிவரும்” என்றார்.