×

எப்பேர்பட்ட பணக்காரர்கள் வந்தாலும் கட்சியில் பதவி இல்லை- புஸ்ஸி ஆனந்த்

 

2026 வரும் சட்டமன்றத்தில் தேர்தலில் உறுதியாக நாம் வெற்றி பெறுவோம், அதில் எந்த சந்தேகமும் இல்லை என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி பகுதியில் உள்ள வி சாலையில் நடைபெற உள்ளது  இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது, சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் மாநாடு தொடர்பான முக்கிய கருத்துக்கள் பேசப்பட்டது. முதல் மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து எவ்வளவு பேரை அழைத்து வர வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது . மாநாட்டில், போலீசார் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது

கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “இந்த மாநாட்டில் அதிகமாக மகளிர் தான் பங்கேற்பபார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும், அதற்கு சந்தேகமே இல்லை. விஜய் என்ற பெயரை சொன்னால் லட்சக்கணக்கான மக்கள் எந்த பணியை வேண்டுமாலும் செய்வார்கள். ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 2026 தான், 26-யில் விஜய் தான் முதல்வர். தமிழகத்தில் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி நம்முடைய கட்சி நிர்வாகிகள் தான் முதலில் இருக்க வேண்டும். தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளை பார்க்க தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. 2026-யில் நம்முடைய இலக்கை அடைய வேண்டும் 

மாநாடு முடிந்த பிறகு கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும், எப்பேர்பட்ட பணக்காரர்கள் வந்தாலும் கட்சியில் பதவி இல்லை. மாநாட்டில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை நபர்கள் பங்கேற்கிறார்கள் என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும், நான் கட்சிக்காக உழைத்திருக்கிறேன் எனக்கு பதவி வேண்டும் என்று வாட்ஸ் அப் மூலம் என்னை தொடர்பு கொண்டால் எனக்கு கோபம் வரும், எதுவாக இருப்பினும் என்னை நேரடியாக அணுக வேண்டும்” என்றார்.