×

பாரிஸ் ஒலிம்பிக்- தேசிய கொடியை ஏந்தியது மிகப்பெரிய கவுரவம்: பி.வி.சிந்து

 

பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கான அணிவகுப்பு ஆடையுடன் கொடி ஏந்தி செல்லும் இந்திய வீரர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தது மிகப்பெரிய கவுரவங்களில் ஒன்று என
இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

அழகிய கட்டடங்கள், பிரமாண்ட அரண்மனைகள், நினைவுச்சின்னங்கள் என பல கலைகள் கொண்ட கலாச்சார தலைநகராக விளங்கும் பிரெஞ்சு நாட்டின் தலைநகர் பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பின் விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியது. உலகம் முழுவதுமிலிருந்து 206 நாடுகளிலிருந்து, 45 விளையாட்டுகளில் 329 பதக்க பிரிவுகள் என மொத்தம் 10,500 வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.  இந்தியாவில் 117 வீரர்கள் 70 பிரிவுகள் என 16 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். நடப்பு ஒலிம்பிக் தொடரில் ஸ்கேட் போர்டிங், பிரேக் டேன்ஸ், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களில் பிரான்ஸ் நாட்டின் அடையாளாமாக விளங்கும் ஈபிள் டவரின் பழைய பாகங்களில் உள்ள இரும்பின் பகுதிகளைப் பதக்கத்தில் பதிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என் சுமார் 5,084 பதக்கங்களில் ஈபிள் டவரின் இரும்புகள் பதிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. 

கடந்த காலங்களில் பெரும்பாலான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடுகளில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் விளையாட்டு அரங்குகள் சிறப்பாக உள்ளதால் ஏற்கனவே உள்ள மைதானங்களில் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறள்ளது. ஒரு சில விளையாட்டு போட்டிகள் முக்கிய சுற்றுலாத்தலம் அருகே விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஈபில் கோபுரத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பீச் வாலிபால் மைதானம், கிராண்ட் பேலஸ் அருங்காட்சியம் அருகே அமைக்கப்பட்டுள்ள வால்வீச்சு, டேக்வோண்டா அரங்கு என சுற்றுலா தளங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. கலை நயத்துடன் கூடிய விளையாட்டு போட்டியாக பாரிஸ் ஒலிம்பிக் தொடர் மாறியுள்ளது. 

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் வீரர்களுக்கான அணிவகுப்பு ஆடையுடன் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசியக் கொடி ஏந்தி சென்றனர். இந்நிகழ்வு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள பி.வி.சிந்து, “மில்லியன் கணக்கானோர் முன்னிலையில் பாரீஸ் 2024  ஒலிம்பிக்கிறாக நம் நாட்டின் கொடியை பிடித்தது என் வாழ்வின் மிகப்பெரிய கவுரவங்களில் ஒன்று” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.