×

நான் போலீசில் சிக்காமல் இருக்க தலைமறைவாக பாதுகாத்தவர் எஸ்பி வேலுமணி- ராஜேந்திர பாலாஜி

 

என் மீது போடப்பட்ட வழக்கில் போலீஸ் என்னை கைது செய்யாமல் 21 நாட்கள் பாதுகாத்தவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி என முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, ஆர். பி. உதயகுமார், கே. டி. ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “திமுக ஆட்சியில் என் மீது போடப்பட்ட வழக்கு பிரச்சனையில் போலீஸ் என்னை கைது செய்யாமல் இருக்க நான் தலைமறைவாக இருந்தபோது என்னை பிரச்சனையிலிருந்து பாதுகாத்தவர் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி. அந்த நாட்களில் என்னை எங்கெங்கெல்லாம் எப்படி எல்லாம் அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்தார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை. மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்கு பிறகு அதிமுக மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது. 

தமிழகம் முழுவதும் அதிமுக கொடி எங்கு பார்த்தாலும் பறக்கிறது. நடந்து முடிந்த அதிமுக மாநாட்டின் மூளையாக செயல்பட்டவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அறிவிப்பு திமுகவுக்கு போதாத காலத்தையும், அதிமுகவுக்கு ஏறு காலத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணியின் செயல்பாட்டால் திமுக அவர் மீது பாய்கிறது. அதிமுகவுக்கு வேலை செய்பவர்களை திமுக முடக்குகிற பணிகள் இன்றைய தினம் கேள்விக்குறியாகிவிட்டது. நடைபெற உள்ள தேர்தல் அதிமுக வெற்றி பெறும் தேர்தலாக அமைந்து எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதல்வர் ஆவார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான பணிகள் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. இதனை கேட்டு திமுகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் அலறுகின்றனர். வரும் காலம் அதிமுகவுக்கான காலம்” என்றார்.