×

கரும்பு கொள்முதல் விலையை ரூ.4,000-ஆக உயர்த்துங்கள்: ராமதாஸ்

 

ஹரியானாவை போன்று கரும்பு கொள்முதல் விலையை ரூ.4 ஆயிரமாக உயர்த்துமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹரியானா மாநிலத்தில் நடப்பு அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,860 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கரும்புக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலை இதுவாகும். ஹரியானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில்  தமிழகத்தில்  நடப்புப் பருவத்தில் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை கூட இன்னும் அறிவிக்கப்படாதது  ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் அக்டோபர் மாதத்தில் அரவைப் பருவம் தொடங்கியுள்ளது. நடப்பு அரவைப் பருவத்தில் 9.50% மற்றும் அதற்கும் குறைவான சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.2919.75, 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,150 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மாநில அரசுகள் விரும்பினால், கூடுதலாக ஊக்கத்தொகை அறிவித்து கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடியும். அந்த முறையில் தான் ஹரியானாவில் கரும்பு கொள்முதல் விலை ரூ.3,860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த அரவைப் பருவத்தில் கொள்முதல்  விலை ரூ.4,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் விலை உயர்வு இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது அம்மாநில உழவர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஹரியானா மாநிலத்திற்கு அடுத்தபடியாக, பஞ்சாப் மாநிலத்தில் கரும்பு கொள்முதல் விலை ரூ.3,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கரும்பு கொள்முதல் விலை ரூ.3,750 ஆக உயர்த்தப்படவுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகக்குறைவாக உள்ளது. இன்றைய நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள டன்னுக்கு ரூ.2919 என்பது தான்  தமிழ்நாட்டில் கரும்பு கொள்முதல் விலை ஆகும். நடப்பு அரவைப் பருவத்திற்கான கொள்முதல் விலை மீது தமிழ்நாடு அரசு இதுவரை எந்த ஊக்கத்தொகையையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கடந்த அரவைப் பருவத்தில் கொள்முதல் விலையாக கரும்புக்கு மத்திய அரசால் அறிவிக்கப் பட்ட ரூ.2821 மட்டும் தான் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டிற்கான அரவைப்பருவமே கடந்த செப்டம்பர்  மாதத்துடன் நிறைவடைந்து விட்ட நிலையில், கடந்த 3&ஆம் தேதி தான் டன்னுக்கு ரூ.195 வீதம் மொத்தம் ரூ.253.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நடப்பாண்டிற்கு இதுவரை ஊக்கத்தொகை அறிவிக்கப் படாத நிலையில், கடந்த ஆண்டு கரும்புக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலை 3,016 ரூபாயை விட குறைவாகவே ரூ.2919 மட்டுமே வழங்கப்படும். இது ஹரியானா மாநில அரசால் வழங்கப்படும் கொள்முதல் விலையை விட ரூ.941 குறைவு ஆகும். இது தமிழக உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

கரும்புக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு சராசரியாக ரூ.3450 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% லாபமாக, ரூ.1725 சேர்த்து கொள்முதல் விலையாக  ரூ.5175 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு அதைவிட குறைவாக கொள்முதல் விலை நிர்ணயித்துள்ள நிலையில், தமிழக அரசு தான் அதன் பங்கிற்கு ஊக்கத்தொகை வழங்கி, அநீதியை போக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு நடப்பு  அரவை பருவத்திற்கு ஒரு ரூபாயைக் கூட ஊக்கத்தொகையாக இன்று வரை அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் 2016-17ஆம் ஆண்டு வரை மத்திய அரசு அறிவிக்கும் விலைக்கு மேல் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அப்போது, மத்திய அரசின் விலையுடன், மாநில அரசின் ஊக்கத்தொகையாக ரூ.650 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அப்போதைய அரசு புகுத்திய வருவாய்ப் பகிர்வு முறையை காரணம் காட்டி மாநில அரசின் ஊக்கத்தொகை குறைக்கப்பட்டது. ஆனால், வருவாய்ப்பகிர்வு முறையும் நடைமுறைக்கு வரவில்லை; மாநில அரசின் ஊக்கத் தொகையும் ரூ.650-லிருந்து ரூ.195 ஆக குறைக்கப்பட்டு விட்டது. நடப்பாண்டில் அதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் சர்க்கரை ஆலைகள் அதிக லாபம் அடைகின்றன; விவசாயிகள் தான் மோசமாக  பாதிக்கப்படுகின்றனர்.

கரும்பு விவசாயிகளின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம்  போன்ற மாநிலங்களைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக  ரூ.5000 வழங்கப்பட வேண்டும். குறைந்தது ஹரியானா மாநிலத்தில்  வழங்கப்படும் ரூ.3,860&ஐ விட சற்று அதிகமாக ரூ. 4 ஆயிரமாவது கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு ரூ.2919 கொள்முதல் விலையாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அதன்  பங்கிற்கு டன்னுக்கு ரூ.1,081 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். அதன் மூலம் தமிழக உழவர்களுக்கு   கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,000 கொள்முதல் விலையாக கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.