சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுங்க - ராமதாஸ் வலியுறுத்தல்..
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 3 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். 2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதல்வர் ரூ.6,100 கோடிக்கான முதலீடுகளை ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3,440 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட முதலீடு வந்துசேரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது எனத் தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்றும் தெரிவிக்க வேண்டும்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் திமுகவின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். இடஒதுக்கீடு தொடர்பாக 35 ஆண்டுக்கால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த திமுக தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஆகஸ்ட் 13-ல் முதல்வர் கூட்டி இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்ச நீதிமன்றமும், பாட்னா உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன.தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்காக, ‘தமிழைத் தேடி’ என்று சென்னை முதல் மதுரை வரை நான் பயணம் செய்தேன். அப்போதே அரசு வணிகர்களுக்கு அறிவுறுத்தியது. குறிப்பிட்ட காலத்துக்குள் பெயர்ப் பலகைகள் தமிழில் மாற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னை, பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் சொல்கிறார்கள். அப்படி இருந்தும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்றால் இதற்கு காவல்துறை உடந்தை என்றே தெரிகிறது.
காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணமாகும். பாசன வாய்க்கால்களை முழுமையாகத் தூர்வார வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 3 பேருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தத் தண்டனை கண்டிக்கத்தக்கதாகும். இந்த விஷயத்தில் இரு நாட்டு மீனவர்களும் காலம் காலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.
கந்து வட்டிக் கொடுமையால் திருப்பத்தூரில் தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர் ஜோலார்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. எனவே, கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்றவேண்டும். இடஒதுக்கீடு ஆணையத்திற்குக் காலக்கெடு நிர்ணயித்திருப்பது பம்மாத்து வேலையாகும். வக்ஃபு வாரிய சட்டம் திருத்தம் குறித்துக் கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.