‘ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கும் எதிரொலிக்கும்’ - உதயநிதி, இபிஎஸ் இரங்கல்..!!
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் ஒரு கேம்ஜேஞ்சராக விளங்கிய ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக முப்பையில் காலமானார். அவருக்கு வயது 86. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா, நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் துறையினர், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திரு ரத்தன் டாடாவின் மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நெறிமுறை வணிக நடைமுறைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்கும் எதிரொலிக்கும் ஒரு தரத்தை அமைத்தது.
நமது தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் திரு டாடாவின் பங்களிப்புகள் அளவிட முடியாதவை, மேலும் அவரது பாரம்பரியம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாக்கம் என்றென்றும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “டாடா குழுமத்தின் கவுரவத் தலைவர் திரு. ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தொழிலதிபரான திரு. ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும்.
மறைந்த திரு ரத்தன் டாடா அவர்தம் குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த திரு. ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.