×

திருப்பதியில் செம்மர கடத்தல்- தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது

 

திருப்பதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர்  உள்பட 3 பேரை கைது அதிரடிப்படையை போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டி.எஸ்.பி. செஞ்சுபாபு மேற்பார்வையில், ரிசர்வ்  இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார்  தலைமையில் இரண்டு குழுக்களாக நேற்று முன்தினம் இரவு முதல் ரோந்து சென்றனர். அப்போது ஆர்எஸ்ஐ லிங்கதர் குழுவினர் திருமலை சென்று திருப்பதி இறங்கு சாலையில் கடத்தல்காரர்கள் வனப்பகுதியில் வந்து செல்லக்கூடிய இடங்களைச் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது  நேற்று காலை திருப்பதி ரூரல் மண்டலம் டிஎன் பாளையம் அருகே செம்மரம் ஏற்றிக் கொண்டிருந்தபோது வாகனம் ஒன்று காணப்பட்டது. அதனை சுற்றி வளைக்க முயன்றபோது  அன்னமையா மாவட்டம் கே.வி.மண்டலத்தைச் சேர்ந்த எஸ்.பயாஸ் (23) என்பவர் பிடிபட்டார்.  

மீதமுள்ளவர்கள் இருட்டில் தப்பினர். இதனையடுத்து  கடத்த இருந்த 33 செம்மரக் கட்டைகளுடன்  இண்டிகோ கார்  பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஆர்.எஸ்.ஐ.க்கள் வினோத்குமார், கே.சுரேஷ்பாபு ஆகியோர் ரங்கம்பேட்டைக்கு சென்று அங்கிருந்து மங்கலம்பேட்டைக்கு ஆய்வு செய்தபோது நேற்று காலை பீமவரம் அருகே சென்றபோது ​​மகேந்திரா ஸ்கார்பியோ கார் அங்கே நின்று கொண்டுருந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, ​​முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்து அவர்கள் காரை சோதனையிட்டபோது ​​அதில் இரண்டு  கோடரிகள் இருப்பது தெரியவந்தது. காரில் இருந்தவர்கள்  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ராமராஜ் நடராஜன் (35), வாணியம்பாடியை சேர்ந்த மோகன் வேல் (24) என தெரிய வந்தது. விசாரணையில் செம்மரக் கட்டைகளுக்காக வந்ததாக ஒப்புக்கொண்டனர். இந்த இரண்டு வழக்குகளும் அதிரடிப்படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.க்கள் மோகன் நாயக், ரபி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.