×

நில மோசடி வழக்கில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி. கைது..  

 


பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சேலத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த வரதராஜ புரத்தை சேர்ந்த சையது அமீன் என்பவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய 5  ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக காந்தம்மாள் என்பவருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சையது அமீன் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு  காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போது தாம்பரம் சார்பதிவாளராக இருந்த மணிமொழியன் தனது உதவியாளர்கள் லதா, சபரீஷ் ஆகியோர் உதவியுடன் போலியாக மாற்றி கொடுத்திருப்பது தெரியவந்தது. 

ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், உடனடியாக இந்த வழக்கை சிபிசிஐடி  மாற்ற வேண்டும் என அமீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் ,  சிபி சி ஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு பத்திரப்பதிவு  உதவியாளர்கள் லதா, சபரீஷ், கணபதி மற்றும் சார் பதிவாளர் மணிமொழியன் ஆகியவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போலி பத்திரப்பதிவுக்கு அப்போது தென்சென்னையில் பணியாற்றி, தற்போது மதுரை மற்றும் சேலம் சரக டிஐஜி ஆக பணியாற்றி வரும் ரவீந்திரநாத் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக 8 முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று சேலம் மற்றும் மதுரை சரக பத்திரப்பதிவுத்துறை டிஐஜி யாக ரவீந்திரநாத்தை சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் சேலத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவீந்திரநாத் இடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.