×

யானைகளுக்கு புத்துணர்வு முகாம்.. தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - ஐகோர்ட் மதுரைக் கிளை 

 

தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட கோரிய வழக்கில்,  அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து  மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  பொதுநல வழக்கு ஒன்றை  தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலங்களில் புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியாக யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் முகாம் நடத்தப்படவில்லை.  கொரோனா காலம் முடிந்த பின்னரும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இதுவரை நடத்தப்படவில்லை. 

முகாம்களில் போதுமான ஓய்வு, பழங்கள், காய்கறிகள், கரும்பு, சிறுதானியங்கள், வெல்லம் போன்ற இயற்கையான சத்துப் பொருட்கள் வழங்கப்படுவதோடு, கால்நடை மருத்துவர்களின் முறையான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த முகாம்கள் முடிந்த பின்னர் யானைகள் புத்துணர்வுடன் காணப்படுகின்றன.  கோவிலுக்கு உள்ளாகவே குளியல் தொட்டிகள், ஷவர் போன்றவை அமைக்கப்பட்டிருந்தாலும் தனிமையாலும், அழுத்தத்தாலும் அவ்வப்போது யானைகளால் பாகன்களும், பக்தர்களும் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  ஆகவே தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமை ஆண்டுதோறும் நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் யானைகளுக்கு கோவில்களில் குளியல் தொட்டி, ஷவர்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.