வேளாண் வறட்சி நிவாரண நிதியினை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
3907 பவர்டில்லர்கள் மற்றும் 293 விசை களையெடுப்பான் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரண நிதியினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ரூ.279 கோடியில் வேளாண் கட்டடங்களை திறந்து வைத்து, 3907 பவர்டில்லர்கள் மற்றும் 293 விசை களையெடுப்பான் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கி, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரண நிதியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.9.2023) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 62 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் மதிப்பிலான 3,907 பவர்டில்லர்கள் மற்றும் 293 விசை களையெடுப்பான் கருவிகள் வழங்கிடும் விதமாக மூன்று விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் விசை களையெடுப்பான் கருவிகளுக்கான ஆணைகளை வழங்கினார். மேலும், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 181 கோடியே 40 இலட்சம் ரூபாய் மிதமான வேளாண் வறட்சி நிவாரணம் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக மூன்று விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான செயல்முறை ஆணைகளை வழங்கினார்.
வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு 1,50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கியது, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம், பயிர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.