×

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுக! வைகோ வேண்டுகோள்

 

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று  தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாணவர்களிடம் சாதிய உணர்வுகளை அகற்றி சமத்துவமும், தோழமையும் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழுவினை நியமித்தது.

பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் ஆகியவைகளிடம் இது தொடர்பான கருத்துக்களை பெற்றும், பிரச்சனைக்குரிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தும் மாணவர்களிடையே சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதற்கான கருத்துக்களை பரிந்துரைகளாக இந்தக்குழு தயாரித்து அதனை முறைப்படி தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி உள்ளது.

கல்வி நிலையங்களிலும், மற்ற பிற இடங்களிலும் சாதிகளின் பெயரால் பகை ஏற்பட்டு அதன் விளைவாக வன்முறை சம்பவங்கள் நடந்து கலவர பூமியாக தமிழ்நாடு மாறிவிடாமல் தடுப்பதற்கான நல்ல முயற்சியாக இந்தக் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளதை வரவேற்று, அவைகளை செயல்படுத்தி தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.