×

சுதந்திரத்திற்கு பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது- ஆளுநர் ரவி

 

மதுரை மாநகர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராசர் கல்லூரியில் நடைபெறும் கருமுத்து தியாகராச செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் தின விழா மற்றும் கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர்.ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதனை தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி. “நம் நாட்டின் பொருளாதாரம், கல்வி நிறுவனங்கள்,கலாச்சாரம், ஆன்மீகம் உள்ளிட்டவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்தியா கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்னதாக மிகப்பெரிய பொருளாதார நாடக இருந்துள்ளது. பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மக்களால் தொடங்கி நடத்தப்பட்டுள்ளது. 1821 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் கல்வி நிலை குறித்து கவர்னர்16 மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார். ஆட்சியர்கள் சமர்ப்பித்த அந்த அறிக்கையில் பள்ளி, கல்லூரிகளில் திருவாசகம் முதன்மையாக இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர்கள் நம்முடைய கல்வியமைப்பை மாற்றி அவர்களுடைய கல்வி திட்டத்தை புகுத்தினார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தான் தான் படிப்பறிவு குறைந்த  நாடக மாறியது. இந்தியா சுதந்திரம் பெற்று சிறிய நாடக இருந்ததால் கல்வியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அப்போது தியாகராசர் செட்டியார்  போன்ற நல்ல மனிதர்கள் தான் ஏழை எளிய மக்களுக்கு கல்வியை வழங்கினார்கள். இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் வணிக நோக்கத்திற்காக மட்டுமே தொடங்கப்படுகிறது. ஒரு பேராசிரியர் 30 கல்லூரிகளில் பணியாற்றுவது போன்ற நிலை உள்ளது - இது எப்படி சாத்தியம் ? இப்படி இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்?

தமிழ்நாடு ஆன்மீகத்தின் தலைநகரம். இந்த மண்ணில் ஆன்மீக வாதிகள் பலர் தோன்றி இருக்கிறார்கள். நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோர்  திருமறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களை இயற்றியுள்ளர்கள். திராவிட மண்ணில் தான் பக்தி இயக்கங்கள் தோன்றியதாக சிறுவயதில் நமக்கு கற்பிக்கப்பட்டு இருக்கின்றது. திருவாசகம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள் தொடர்பான பாடங்கள் கல்லூரி, பள்ளிகளில் இடம்பெற வேண்டும். நமக்கு ஆரம்பக்கல்விகளில் நிலையான பாடத்திட்டம் இல்லை. எனவே திருவாசகம் போன்றவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்வியோடு சேர்ந்து பக்தி இலக்கியங்களும் இருக்க வேண்டும். அது தான் வேர்., மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவற்றின் முக்கியத்துவத்தை நம் தலைமுறைக்கு சொல்லித்தரவில்லை, சிறிய பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியங்களோடு கல்வியையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும்” என பேசினார்.