×

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கிய போக்குவரத்து காவல் துறை.. 

 

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள  பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார்.  

 சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற வலியுறுத்தி போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக  ஆகஸ்ட் 6 முதல் 25ம் தேதி வரை, அதாவது 20 நாட்கள் சென்னை பெருநகர காவல் எல்லையில் விபத்தில்லா சென்னையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் எங்கு பார்த்தாலும் ‘ஜீரோ இஸ் குட்’ என்கிற வாசகமே கண்முன் தெரிகிறது.  விபத்தில்லா மாநகரம் உருவாக்கும் வகையில் அனைத்து சிக்னல்களிலும் ‘ஜீரோ இஸ் குட்’ என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை வைத்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். 

அத்துடன் ஜீரோ விபத்து என்பதை வலியுறுத்தும் விதமாக சென்னை போக்குவரத்துக் காவல்துறை, பல்வேறு பகுதிகளில் உள்ள டிராஃபிக் சிக்னல்களில் ரெட் சிக்னல்கள் ஹார்ட்டின் வடிவில் ஒளிரும்படி வடிவமைத்திருக்கின்றனர்.  இந்த  ஜீரோ டே என்றால் விபத்தை மட்டும் ஜீரோ ஆக்குவது அல்ல. அதுமட்டுமின்றி ஜீரோ அபராதம், ஜீரோ செலான், ஜீரோ விதிமீறல் என விபத்து, விதிமீறல், அபராதம் என அனைத்தையும் ஜீரோ என்கிற நிலைக்கு கொண்டு வர  வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், சென்னையில் உள்ள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ‘நம் குழந்தைகளைப் பாதுகாப்போம் மற்றும் பாதுகாப்பான பழக்கங்களை குழந்தைகளிடத்தில் ஆரம்பத்திலேயே புகுத்துவோம்!’ என்பதை வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.