×

போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பேச்சுதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 

போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பேச்சுதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் 7ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி, நெல்லை கல்லிடைக்குறிச்சி வெங்கடேஷ் உள்ளிட்ட தொழிலாளர்கள் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழி சுடலை கோயில் அருகே சாலை பணியில் ஈடுபட்டிருந்த போது தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23), சந்துரு (23) ஆகியோர் கருப்பசாமி, வெங்கடேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். மதுபோதையில் கட்டுமான தொழிலாளி கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொன்ற இவர், அப்போது தடுக்க வந்த வெங்கடேஷ் என்பவரை வெட்டியதோடு, அரசு பேருந்து ஓட்டுநரையும் வெட்ட முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரவநல்லூர் போலீசாரை கண்டதும் ரவுடிகள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். அத்துடன் பிடிக்க சென்ற போலீசார் ஒருவரை ரவுடிகள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதை தொடர்ந்து அப்போது ரவுடிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே மோததில் ரவுடி பேச்சுத்துரையை போலீசார் சுட்டனர்.  இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்  போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பேச்சுதுரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.