×

தப்பியோட முயன்ற ரவுடி.. சுட்டுப்பிடித்த போலீஸ்.. சென்னையில் பரபரப்பு..  

 

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.   

சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரோகித் ராஜன், பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் கொலை உள்பட 3 கொலை வழக்குகளும் இவர் மீது உள்ளன.  கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி ரோஹித் ராஜ், தேனியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  அதன் அடிப்படையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தேனி சென்ற சென்னை போலீஸார், அங்கு பதுங்கியிருந்த ரோகித்தை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். 

இந்த நிலையில், இன்று அதிகாலை  ரவுடி ரோஹித்தை சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இடங்களுக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். அப்படி சேத்துப்பட்டு பகுதியில் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது ரவுடி ரோஹித் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் காலில் பலத்த காயமடைந்த ரோஹித் ராஜனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.